"புலிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை அரசாங்கமே பகிர்ந்தளிப்பது தவறு"

  • 5 டிசம்பர் 2014

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை அதன் உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சட்டவிரோதமானது என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை BASL
Image caption உபுல் ஜயசூரிய

உரிமையாளர்கள் இல்லாத பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அப்படியானப் பொருட்கள் நீதிபதியின் உத்தரவின் பேரில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கொழும்பில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

அப்பொருட்களை பின்னர் உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதையும் நீதிமன்றத்தால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும் அதனைப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

மேலும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கும் நோக்கில், கொழும்பிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற மாளிகையில் வைத்து ஆயிரக்கணக்கானோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய ஜயசூரிய இது தேர்தல் சட்டத்தை மீறுகிற செயல் என தெரிவித்தார்.

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், அதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

தவிர கொழும்பில் சட்டவிரோதமான முறையில் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பதாதைகள் நீக்கப்படாவிட்டால் கொழும்பு நகர மேயருக்கு எதிராக தாங்கள் வழக்கு தொடருவோம் எனவும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய கூறினார்.